தமிழகத்தில் புதிய மதுக்கடைகள் திறக்கப்படவில்லை; அமைச்சர் முத்துசாமி பேட்டி


தமிழகத்தில் புதிய மதுக்கடைகள் திறக்கப்படவில்லை; அமைச்சர் முத்துசாமி பேட்டி
x

தமிழகத்தில் புதிய மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு

தமிழகத்தில் புதிய மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஒரே நேரத்தில் திறப்பு

ஈரோட்டில் ரூ.16 கோடியே 22 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் ரூ.201 கோடி ஒதுக்கப்பட்டு ஈரோட்டில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பணிகள் நடக்கிறது. இதில் சாலைக்கு மட்டும் ரூ.132 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. ரூ.15 கோடி செலவில் தெரு விளக்குகள் பணியும், ரூ.20 கோடி செலவில் திடக்கழிவு மேலாண்மை பணியும் நடக்கிறது.

சோலாரில் பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் வேகமாக நடக்கிறது. தற்காலிக பஸ் நிலையம் தயாராக உள்ளது. கனிராவுத்தர் குளம் பகுதியில் 13 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. அதன்பிறகு தற்காலிக பஸ் நிலையம் அமைக்க முடியும். எனவே சோலார், கனிராவுத்தர் குளம் ஆகிய 2 பஸ் நிலையங்களையும் ஒரேநேரத்தில் திறந்து வைத்தால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

உடனடி நடவடிக்கை

கனிமார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்டு உள்ள வணிக வளாகத்தில் தண்ணீரை வெளியேற்ற திட்டமிடப்பட்டது. அங்கு அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. இருந்தாலும் தண்ணீர் தேங்காத வகையில் அதிகாரிகளால் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் சட்டவிரோதமாக ஒரு இடத்திலும் பார் செயல்படுவது கிடையாது. புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க திறந்த மனதுடன் தயாராக இருக்கிறோம். டாஸ்மாக்கில் பணியாற்றும் 2 ஆயிரம் பேருக்கு முதுநிலை அடிப்படையில் பணி இடமாறுதல் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், மது விற்பனை முழுமையாக கணினி மயமாக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 2 மாதங்களில் இந்த பணிகள் நிறைவடையும். அதன்பிறகு மது பாட்டில்கள் எங்கு வாங்கப்பட்டது, எங்கே கொண்டு செல்லப்படுகிறது என்பதில் இருந்து மது விற்பனை செய்யும் வரை கணினி மூலமாக கண்காணிக்க முடியும்.

திறக்கப்படவில்லை...

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதன்பிறகு எங்கும் புதிய கடைகள் திறக்கப்படவில்லை. பிரச்சினை உள்ள கடைகள் மட்டும் இடமாற்றம் செய்யப்படுகிறது. டாஸ்மாக் ஊழியர்கள் வைத்த 49 கோரிக்கைகளில் 39 கோரிக்கைகள் பேசி தீர்வு காணப்பட்டது. சம்பள உயர்வு தொடர்பாக உணர்வுபூர்வமாக போராட நினைக்கின்றனர். ஆனால் சம்பள உயர்வு தொடர்பாக மற்ற துறைகளுடன் சேர்ந்து முடிவு செய்ய வேண்டியுள்ளது.

அத்திக்கடவு-அவினாசி திட்டம்

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் 1,045 குளங்கள் உள்ளன. அதில் 920 குளங்கள் சீரமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. மீதமுள்ள குளங்களுக்கு தண்ணீர் வசதி இல்லாததால் தாமதமானது. 26 விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண்பித்து உள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story