'தமிழ் மொழியை யாரும் அழித்து விட முடியாது'
தமிழ் மொழியை யாரும் அழித்து விட முடியாது என மயிலாடுதுறையில், டாக்டர் ராமதாஸ் கூறினார்.
தமிழ் மொழியை யாரும் அழித்து விட முடியாது என மயிலாடுதுறையில், டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பொதுக்கூட்டம்
பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனரும், பா.ம.க. நிறுவனருமான டாக்டா் ராமதாஸ், 'தமிழைத்தேடி' என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை சென்னையில் கடந்த 21-ந் தேதி தொடங்கினார். 8 நாட்கள் நடைபெறும் இந்த பிரசார பயணம் 28-ந் தேதி மதுரையில் நிறைவடைகிறது. அந்த வகையில் இந்த பிரசார பயணம் 4-வது நாளான நேற்று மயிலாடுதுறைக்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து மயிலாடுதுறையில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிர்வாகி அன்பழகன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அன்னிய மொழி கலப்பின்றி பேசுவதில்லை
தமிழை வளர்ப்பதில் சைவ சமய ஆதீனங்களின் பங்கு அளப்பரியது. குறிப்பாக தருமபுரம் ஆதீனம், தமிழ் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால் அறிஞர்கள் முதல் சாமானியர்கள் வரை தற்போது யாரும் அன்னிய மொழி கலப்பின்றி பேசுவதில்லை.இதன் காரணமாகவே தமிழைத் தேடி என்ற இந்த விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை மேற்கொண்டு உள்ளேன். மெல்லத் தமிழ் இனி சாகும் என நீலகண்ட சாஸ்திரி கூறினார். ஆனால் தமிழ் தற்போது வேகமாக செத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்மொழியை அழிக்க முடியாது
கொரோனோ காலத்தில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை படித்துப் பார்த்தேன். எவ்வளவு அருமையான மொழி. இந்த தமிழ்மொழியை யாரும் அழித்துவிட முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தருமபுர ஆதீன தம்பிரான் சிவகுருநாத சாமிகள், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பேராசிரியர்கள் சிவச்சந்திரன், சிவசங்கரன், தமிழ்வேல், துரை குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிர்வாகிகள் பழனிச்சாமி, அய்யப்பன், கமல்ராஜா, கண்ணகி சஞ்சீவி ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குமாரசாமி நன்றி கூறினார்.