அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் இல்லை-மத்திய மந்திரி பேட்டி


அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் இல்லை-மத்திய மந்திரி பேட்டி
x

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஏர்வாடி மெயின் ரோட்டில் பா.ஜ.க. தெற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட பார்வையாளர் நீலமுரளி யாதவ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங் பா.ஜ.க. அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பா குத்து விளக்கேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி வி.கே.சிங் நிருபர்களிடம் கூறுகையில், "அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகவே அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. தமிழகத்தில் தற்போதுள்ள கூட்டணி தொடரும். தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி கட்சிகள் குறித்து தலைமை முடிவு எடுக்கும். இப்போது எதுவும் கூற முடியாது" என்றார்.


Next Story