தி.மு.க.ஆட்சியில் எந்தவொரு திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை-எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தி.மு.க. ஆட்சியில் எந்தவொரு திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பொள்ளாச்சி
தி.மு.க. ஆட்சியில் எந்தவொரு திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
உற்சாக வரவேற்பு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கரியாஞ்செட்டிபாளையத்தில் நடந்த கோட்டூர் பாலு இல்ல காதணி விழாவிற்கு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அவருக்கு அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதை தொடர்ந்து காந்தி சிலை அருகில் அமைக்கப்பட்டு மேடைக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். அவருக்கு பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. வீரவாள் வழங்கியதோடு மலர்கீரிடம் மற்றும் ஆளுயுர மாலை அணிவித்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சி நாட்டு மக்களின் பிரச்சினைகளை கவனத்திற்கு கொண்டு சென்றால், அதற்கு முதல்-அமைச்சர் பதில் சொல்வதில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது தி.மு.க. மத்திய மந்திரி காந்திசெல்வன் பதவியில் இருக்கும் போது நீட் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது தான் கொண்டு வரப்பட்டது என்று சுகாதாரத்துறை அமைச்சர் பச்சை பொய் கூறுகின்றார்.அ.தி.மு.க. நீட் தேர்வை ரத்து செய்ய கடைசி வரை போராடியது.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வுரத்து செய்யப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகியும் ரத்து செய்யவில்லை.
மின் கட்டணம் உயர்வு
கோவை மாநகராட்சியில் 133 வேலைக்கு ரூ.48 கோடிக்கு டெண்டர் விட்டனர். ஒப்பந்ததாரரிடம் 18 சதவீதம் கமிஷன் கேட்டு ஒரு முறை, இரு முறை அல்ல 11 முறை தள்ளிவைத்தனர். அதனால்தான் எந்தவேலையும் நடைபெறாமல் உள்ளது. இப்படிப்பட்ட ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போடப்பட்ட திட்டங்களுக்கு இன்னும் தொடக்க விழா கண்டு ரிப்பன் வெட்டுகின்றனர். தி.மு.க. ஆட்சியில் எந்தவொரு திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை. சட்டம், ஒழுங்கு சரியில்லை. போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. அண்டை மாநிலத்தில் இருந்து போதை பொருட்கள் கொண்டு வருவதை தடை செய்யாமல், மத்திய அரசு தான் காரணம் என்று தப்பிக்க பார்க்கின்றனர்.
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ரத்து செய்ய மக்களிடம் கருத்து கேட்கின்றனர். எங்காவது இது நடக்குமா? ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் அந்த நிறுவனம் ஆண்டிற்கு ரூ.20 ஆயிரம் கோடி சம்பாதிக்கின்றது.
மின்சார வாரியத்திற்கு மின் கட்டணம் மூலம் கோடிக்கணக்கில் அரசுக்கு வருவாய் வருகிறது. ஆனால் தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆண்டுக்கு 6 முறை உயர்த்தி கொள்ளலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. 100 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது. கடைகளுக்கு 150 சதவீதம் உயர்த்தி உள்ளனர். இந்த அரசு மக்களிடம் எப்படி சுரண்டுகிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். மின் கட்டணத்தை தொடர்ந்து பஸ் கட்டணத்தையும் உயர்த்த உள்ளனர். மக்களை பற்றி கவலைப்படாத முதல்-அமைச்சர் ஆட்சி நடத்துகிறார்.
வர முடியுமா?
அ.தி.மு.க.வில் உள்ள சாதாரண தொண்டன், ஒரு விவசாயி முதல்-அமைச்சராக, உயர்ந்த இடத்திற்கு வந்து உள்ளார். இது அ.தி.மு.க.வில் மட்டும் தான் முடியும். எடப்பாடி பழனிசாமி இல்லையெனில் இங்கு இருக்கிற யாராவது ஒருவர் கட்சிக்கு பொறுப்பாளராக வரலாம். தி.மு.ககட்சியில் வர முடியுமா?
ஒவ்வொரு முறையும் சோதனைகளை வென்று அ.தி.மு.க. ஆட்சி அமைத்து உள்ளது. நாங்கள் தற்காலிக தலைவர் இல்லை.
ஆனைமலையாறு-நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்ற கேரளா அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு குழு அமைக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் செய்யப்பட்ட பிறகு கிடப்பில் போடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தாமோதரன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் வெங்கடாச்சலம், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், நகர கூட்டுறவு வங்கி தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், திருஞானம்பந்தம், செந்தில், நிர்வாகிகள் ரகுபதி, ஓ.கே.முருகன், ஜேம்ஸ்ராஜா, அருணாசலம், கனகராஜ், செல்வி பத்மினி, மார்ட்டின், ராஜ்கபூர், ஈஸ்வரன், ஸ்கேன் பாயிண்ட் காளிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.