மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை - அமைச்சர் ரகுபதி பேட்டி
அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
சென்னை,
தமிழ் புத்தாண்டு தினமான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் 17 பேரின் சொத்து பட்டியல் மற்றும் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிடுகிறார். இது முதல் பாகம் என்றும், அடுத்த பாகம் விரைவில் வெளியிடப்படும் என்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. சொத்து பட்டியல் வெளியீடு மேலும் தி.மு.க.வினர் மீதான சொத்து பட்டியலையும், ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிடுவதை பார்க்க, கமலாலயத்தில் அகன்ற திரை வைக்கப்படவுள்ளது. அதில் முழு விவரமும் ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அண்ணாமலையின் இந்த நடவடிக்கை, அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
இந்த நிலையில் அண்ணாமலை ஊழல் பட்டியல் குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
"அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. எங்களுக்கு மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை; சொத்து, ஊழல் பட்டியலை வெளியிட்டால் வெளியிடட்டும். துணைவேந்தர் விவகாரம் உள்ளிட்ட 11 மசோதாக்கள் ஆளுநர் வசம் இன்னும் நிலுவையில் உள்ளது" என்று கூறினார்.