எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது: முன்னாள் அமைச்சர் பேச்சு
எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
பொதுக்கூட்டம்
கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா மற்றும் மதுரையில் நடைபெற்ற பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கிடும் பொதுக்கூட்டம் கரூர் உழவர்சந்தை அருகே நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் திருவிகா தலைமை தாங்கினார். கரூர் மாநகர மத்திய தெற்கு பகுதி செயலாளர் சேரன் பழனிச்சாமி வரவேற்றார். இதில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான சின்னசாமி, தலைமை கழக பேச்சாளர் அறிவானந்தம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
அப்போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும்போது கூறியதாவது:- பேரறிஞர் அண்ணாவை யார் கொச்சைப்படுத்தினாலும், அந்த கூட்டணி எங்களுக்கு தேவையில்லை என முழக்கமிட்டவர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
யாராலும் தடுக்க முடியாது
தி.மு.க.வினர் அண்ணாவை உரிமை கொண்டாடி இருக்கலாம். ஆனால் அண்ணாவின் பெயரை கழகத்தின் பெயராக வைத்து, அண்ணாவின் உருவத்தை கொடியில் வைத்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை உருவாக்கியவர் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பொய்யை கூறி தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்றத்திற்கு தேர்தல் வரலாம். தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமைத்தொகை தகுதியானவர்களுக்கு தான் கொடுப்போம் என கூறினார்களா? அப்போது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்றனர்.
பொய்யை சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க.வின் நாட்கள் எண்ணிக்கொண்டிருக்கிறது. எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.
234 தொகுதியிலும்...
அ.தி.மு.க. 234 தொகுதியிலும் தனித்து நின்று வரலாற்று சாதனை செய்த இயக்கம். நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி யாரை கைநீட்டி காட்டுகிறாரோ அவரை வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ஆலம் தங்கராஜ், இணை செயலாளர் மல்லிகா சுப்பராயன், பொருளாளர் எம்.எஸ்.கண்ணதாசன், கரூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி, கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலமுருகன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கமலகண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சரவணன், முன்னாள் நகர செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.