பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் அவதி
திருப்பூர் தாராபுரம் ரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா? என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பொதுமக்கள் அவதி
திருப்பூர் தாராபுரம் ரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு காரணங்களுக்காக வந்து செல்கின்றனர். இதில் அதிகமானோர் போக்குவரத்துக்காக அரசு மற்றும் தனியார் பஸ்களை பயன்படுத்துகின்றனர். இப்பகுதி மிகவும் போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். மேலும் இதன் வழியாக கோவில்வழி, தாராபுரம், கொடுவாய் மற்றும் உள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் வந்து பயணிகளை ஏற்றி செல்கின்றன. இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் வெயில் மற்றும் மழை காலங்களில் ஒதுங்க வழியில்லாமல் பொதுமக்கள் அவதியடையும் நிலைக்கு தள்ளபட்டு உள்ளனா்.
பயணிகள் நிழற்குடை
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு நோயாளிகள், கர்ப்பிணிகள், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் பஸ்சுக்காக மரத்தடியில் நிற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் மதிய வேளைகளில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல், பயணிகள் ஒதுங்க வழியின்றி சாலையோரம் அமர்வதால் விபத்து ஏற்படும் அபாயநிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அரசு மருத்துவக்கல்லூரி முன்பு நோயாளிகள் நலன் கருதி பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.