தயாராகும் பிரமாண்ட தேர் வடக்கயிறு
சிங்கம்புணரியில் குலமங்களம் உடைய பராசக்தி கோவிலுக்காக பிரமாண்ட தேர் வடக்கயிறு தயாரிக்கப்பட்டு வருகிறது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் குலமங்களம் உடைய பராசக்தி கோவிலுக்காக பிரமாண்ட தேர் வடக்கயிறு தயாரிக்கப்பட்டு வருகிறது.
கயிறு தயாரிப்பு
சிங்கம்புணரி பகுதியில் தென்னை அதிகளவு பயிரிடப்படுவதால் இந்த பகுதியில் தென்னை நார்களை கொண்டு கயிறுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சாரம் கட்டுவதற்காக கொச்சை கயிறு, விவசாயத்துக்கு தேவைப்படும் நாத்து கட்டும் கயிறு உள்ளிட்ட கயிறுகள் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு வடக்கயிறுகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் குலமங்களம் உடைய பராசக்தி கோவில் தேருக்காக 170 அடி நீளமும், 12 இன்ச் சுற்றளவு கொண்ட பிரமாண்ட வடக்கயிறு தயாரிக்கும் பணி சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனார் கோவில் வளாகப் பகுதியில் தொடங்கி நடைபெற்றது. சுமார் 45 பணியாளர்கள் 7 நாட்களாக இதை தயாரித்து வருகின்றனர்.
2½ டன் எடை
இந்த பிரமாண்ட வடக்கயிறு சுமார் இரண்டரை டன் எடை கொண்டது. தென் தமிழகத்திலேயே சிங்கம்புணரி பகுதியில் தயாரிக்கப்படும் இந்த தேர் வடக்கயிரானது முழுக்க முழுக்க இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படுவதாகும். தென்னை தேங்காய் மட்டைகளிலிருந்து நார் உறித்து பக்குவம் செய்து கயிறாக திரித்து பின் வடக்கயிராக தயாரிக்கப்படுகிறது.
இதுகுறித்து கயிறு தயாரிப்பாளர் நல்லதம்பி கூறும்போது, இறைவன் திருப்பணியில் எங்கள் குடும்பத்தார்கள் நான்கு தலைமுறையாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தேர் வடக்கயிறு என்பது இறைவனுக்கு செய்யும் தொண்டாகவே நினைத்து நாங்கள் பணிபுரிந்து வருகின்றோம். தேர் வடக்கயிறு தயாரிக்கும் போது தயாரிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மாமிசம் உண்ணாமல் கடுமையான விரதம் இருந்து தேர் வடக்கயிறு தயார் செய்யும் பணியில் ஈடுபடுவோம் என்று கூறினார்.