மின்சாரம் தாக்கி வடமாநில மாணவர் பலி
மின்சாரம் தாக்கி வடமாநில மாணவர் பலி
அரசூர்
சூலூர் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில மாணவர் பலியானார். தந்தை வேலை செய்யும் தொழிற்சாலைக்கு மாணவர் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
10-ம் வகுப்பு மாணவர்
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த அரசூரில் உள்ள தனியார் பவுண்டரி தொழிற்சாலையில் பீகாரைச் சேர்ந்த ராஜேந்திர மஞ்சு (வயது34) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் உமேஷ் குமார் பீகாரில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறையையொட்டி தனது தந்தையை பார்க்க அரசூர் வந்து அவரது தந்தையுடன் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை அவரது தந்தை வழக்கம்போல் பவுண்டரிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
மின்சாரம் தாக்கி சாவு
வீட்டில் தனியாக இருக்க முடியாமல் உமேஷ் குமார் (16),தனது தந்தையை பார்க்க அவர் பணிபுரியும் பவுண்டரிக்கு வந்துள்ளார். அப்போது தனது தந்தை வேலை செய்து கொண்டிருக்கும் மண் சலிக்கும் எந்திரம் அருகே உள்ள மின் சாதன பெட்டியில் எதிர்பாராத விதமாக கை வைத்துள்ளார். இதனால் உமேஷ் குமார் மீது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியது.இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் உமேஷ் குமாரை மீட்டு நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உமேஷ் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்கள்.
விசாரணை
இதுகுறித்த புகாரின் பேரில் சூலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ். ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.