வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை


வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை
x

திருச்சியில் வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

திருச்சியில் வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓட்டல் தொழிலாளி

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் விக்ரம் (வயது 34). இவர் திருச்சி புத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள பல்வேறு ஓட்டல்களில் தொழிலாளியாக (சர்வர்) பணியாற்றி வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இவர் அதே பகுதியில் உள்ள அன்புக்கரங்கள் என்ற இடத்தில் வைக்கப்படும் துணிகளை எடுத்து உடுத்திக் கொள்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை இவர் திருச்சி கோட்டை ெரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கும் அங்கு நின்று இருந்த பெண் உள்பட 3 பேர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, அவர்கள் 3 பேரும் சேர்ந்து விக்ரமை அடித்து உதைத்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து அவர் தப்பி ஓடினார். ஆனாலும் அவரை துரத்தி சென்று தாக்கினர்.

குத்திக்கொலை

தொடர்ந்து மாரிஸ் பாலம் அருகே உள்ள ஒரு கடை வாசலில் வைத்து 3 பேரும் சேர்ந்து விக்ரமை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பாலியல் தொந்தரவு

முதல்கட்ட விசாரணையில், திருச்சி உறையூர், விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் தீபிகா (27) கைக்குழந்தையுடன் தனியாக ரோட்டில் யாசகம் எடுத்து சாலையோரங்களில் தங்கி வந்துள்ளார். இவருக்கும் திருச்சி கீழ சிந்தாமணியை சேர்ந்த பாலா என்கிற வெந்தகை பாலா (34) என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோட்டை பஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் தூங்கிய போது விக்ரம் தீபிகாவிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தாராம்.

3 பேர் கைது

இது குறித்து தீபிகா வெந்தகை பாலாவிடம் கூறினார். இதையடுத்து நேற்று மாலை பாலா மற்றும் அவரது நண்பர் திருச்சி பெரியகடை வீதி சந்துக்கடையை சேர்ந்த கணேசன் (35), தீபிகா ஆகியோர் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதனிடையே கரூர் செல்லும் பஸ்சில் 3 பேரும் தப்பி செல்ல இருந்த நிலையில் 3 பேரையும் சத்திரம் பஸ்நிலையத்தில் வைத்து கோட்டை போலீசார் பிடித்து கைது செய்தனர். கொலை நடந்த சில மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த கோட்டை போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா, துணை கமிஷனர் அன்பு ஆகியோர் பாராட்டினர்.


Related Tags :
Next Story