வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்: வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்


வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்: வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்
x

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சென்னை,

வட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடைய பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை. வட மாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, தமிழகத்தில் பல்வேறு தொழில் துறைகளில் பணிகள் சுமுகமாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு மேலும் தாமதம் செய்யாமல், வட மாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, தமிழகத்தில் பல்வேறு தொழில் துறைகளில் பணிகள் சுமுகமாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடைய பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் பல்வேறு துறைகளிலே பலவிதமான பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். குறிப்பாக திருப்பூர், கோயம்புத்தூர், போன்ற தொழில்துறையைச் சார்ந்த மாவட்டங்களில் அனைத்து அடித்தளப் பணிகளை செய்வதில் கைத்தேர்ந்தவர்களாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

கொரோனாவிற்குப் பிறகு மீண்டும் தமிழகத்தில் பல்வேறு துறை படிப்படியாக முன்னேறிக்கொண்டு இருக்கும் போது, வட மாநில தொழிலாளர் மீது தாக்குதல் நடைபெறுவதாக வதந்தி பரவி அவர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இச்செய்தி தமிழகத்திற்கான வளர்ச்சிக்கு நல்ல செய்தியல்ல.

மேலும் வட மாநில தொழிலாளர்களும், தமிழகத்தை சேர்ந்த நமது தொழிலாளர்களும்

கிராமம் முதல் நகரம் வரை தங்களது வாழ்வாதாரம் உயர இணைந்து பணியாற்றிக்கொண்டு வரும் சூழலில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று தங்கள் மாநிலத்திற்கு திரும்பக்கூடிய சூழ்நிலையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அவர்களின் அச்சத்தை போக்கி இயல்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதிகம் படிப்பறிவு இல்லாத தொழிலாளர்கள் வீண் வதந்திகளை நம்பி ஏமாறும் நிலை இன்று உருவாகியுள்ளது.

வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் என்று வதந்திகளை யாரும் பரப்ப கூடாது. அப்படி பரப்புபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். வட மாநில தொழிலாளர்களுக்கு அவர்களின் பயத்தை போக்கி உரிய நம்பிக்கையை அளிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை தாமதமில்லாமல் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story