கிணத்துக்கடவு பகுதியில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை-வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிவுரை

கிணத்துக்கடவு பகுதியில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை-வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிவுரை
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தென்னை நார் தொழிற்சாலை, தேங்காய் உரிப்பு, இரும்பு கம்பி தயாரிப்பு தொழிற்சாலை, மோட்டார் உதிரி பாகங்கள், கட்டுமான வேலை, கல்குவாரி மற்றும் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் சமூக வலைதளங்களில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அதனால் அவர்கள் சொந்த ஊருக்கு இடம்பெயர்வதாகவும் வதந்தி கிளம்பி உள்ளது. இந்தநிலையில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் -இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ஜெகதீசன் மற்றும் போலீசார்கிணத்துக்கடவு, அரசம்பாளையம், காரச்சேரி, முள்ளுப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் உங்களுக்கு ஏதும் குறைகள் என்றால் போலீஸ் நிலையத்தை அணுகலாம். வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படும் சம்பவம் எல்லாமே வதந்தி அதை யாரும் நம்ப வேண்டாம். அரசு உங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதனால் நீங்கள் அச்சமின்றி வேலை பார்க்கலாம். மேலும் வட மாநில தொழிலாளர் குறித்து தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பினால் அந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிணத்துக்கடவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






