வடகிழக்கு பருவமழை; வெள்ளத்தடுப்பு பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் - தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு


வடகிழக்கு பருவமழை; வெள்ளத்தடுப்பு பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் - தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு
x

மழைநீரை சேமிப்பதற்காக மேற்கொண்டு வரும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டார்.

சென்னை,

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அரசு செயலாளர்கள், துறைத்தலைவர்கள், ராணுவம், விமானம், கப்பல் படை, கடலோர காவல் படை, இந்திய வானிலை ஆய்வு மையம், ஒன்றிய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட ஒன்றிய அரசுத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதன்படி நீர்வள ஆதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகிய துறைகள் மழைநீரை சேமிப்பதற்காக மேற்கொண்டு வரும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். வெள்ள காலங்களில் கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்க சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கால்நடை பராமரிப்பு துறைக்கு அறிவுரை வழங்கினார்.

புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மேற்பார்வையிட்டு விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களையும், வழிகாட்டுதல்களையும் தலைமைச் செயலாளர் இறையன்பு வழங்கினார்.


Next Story