வடகிழக்கு பருவமழை - நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


வடகிழக்கு பருவமழை  - நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
x
தினத்தந்தி 25 Sep 2022 3:39 PM GMT (Updated: 25 Sep 2022 4:43 PM GMT)

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலைவாணர் அரங்கில் நாளை அமைச்சர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. அதித பெய்த பருவமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது அணைகள் நிரம்பி வழிகின்றன. தென்மேற்குப் பருவமழை காலம் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. இந்த நிலையில் வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் சென்னை புறநகர் மட்டுமல்லாது நகர் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனையடுத்து சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் அமைப்புகளில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே ஏரிகள், நீர்நிலைகள், நீர்வழித் தடங்கள், ஆறுகள் போன்றவற்றில் தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய வடிகால் வாய்க்கால்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சர்களுடன் நாளை மறுநாள் சென்னை கலைவாணர் அரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துறை சார்ந்த செயலாளர்கள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார். வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் சவால்களை திறம்பட கையாளுவது, நீர்நிலைகள், கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள், கரைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள், மாவட்ட நிர்வாகத்திற்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story