மோட்டார்சைக்கிள் வாங்கி கொடுக்காததால் வாலிபர் தற்கொலை
வேடசந்தூர் அருகே, தந்தை மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மோட்டார் சைக்கிள்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஆர்.கோம்பை ஊராட்சி அரசன்பூசாரிபுதுரை சேர்ந்தவர் அர்ஜூனன். விவசாயி. அவருடைய மகன் ஜெயப்பிரகாஷ் (வயது 22). இவர், டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்தார்.
ஜெயப்பிரகாஷ், தனது தந்தையிடம் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டார். ஆனால் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு தற்போது பணம் இல்லை என்றும், பிறகு வாங்கி தருவதாகவும் அர்ஜூனன் கூறினார். இதனை ஏற்றுக்கொள்ளாத ஜெயப்பிரகாஷ் மனம் உடைந்து காணப்பட்டார்.
சாப்பாட்டில் விஷம்
இந்தநிலையில் மாயாண்டிபுதூரில் உள்ள தனது தோட்டத்துக்கு ஜெயப்பிரகாஷ் சென்றார். பின்னர் அங்குள்ள மோட்டார் அறையில் அமர்ந்து, சாப்பாட்டில் விஷம் கலந்து தின்றார். சிறிதுநேரத்தில் அவர் வாந்தி எடுத்தார்.
இதனை அந்த வழியாக சென்ற பக்கத்து தோட்டத்தில் வசிக்கிற சண்முகம் என்பவர் பார்த்தார். இது தொடர்பாக அவருடைய தந்தை அர்ஜூனனுக்கு சண்முகம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து பதறியடித்து அர்ஜூனன் அங்கு வந்தார்.
பரிதாப சாவு
பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜெயப்பிரகாசை, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயப்பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் அர்ஜூனன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தந்தை மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால், வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.