மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர் மீதும் கடும் நடவடிக்கை
பஸ்படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்டால் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்
விழுப்புரம்
12 வாகனங்கள் பறிமுதல்
விழுப்புரம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டுப்போனது. இவற்றை திருடிய குற்றவாளிகளை பிடிக்க விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பரணிநாதன், சத்யா, பிரபு, கணேசன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று விழுப்புரம் ஜானகிபுரம் டாஸ்மாக் கடை அருகே தீவிர ரோந்துப்பணியில் இருந்தபோது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்தபோது அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது என்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா திருவதிகை செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் அய்யனார் என்ற அப்பு(வயது 28) என்பதும், இவர் மீது பண்ருட்டி, நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வாகன திருட்டு வழக்குகள், ஒரு வழிப்பறி வழக்கு நிலுவையில் இருப்பதும், விழுப்புரத்தின் பல பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனங்களை திருடி தனது நண்பர்களான விழுப்புரத்தை சேர்ந்த சரவணன், ரெட்டணையை சேர்ந்த குமரன், கள்ளப்பட்டை சேர்ந்த அசோக் ஆகியோரிடம் கொடுத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அய்யனாரை போலீசார் கைது செய்து அவர் கொடுத்த தகவலின்பேரில் 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பார்வையிட்டு அதனை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை பாராட்டினார். பின்னா் அவர் கூறும்போது, பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்வதோடு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையிலும் பயணம் செய்கின்றனர். இதுகுறித்து மாணவர்களிடம் காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அதனையும் மீறி இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் பள்ளி- கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்பவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதன் ஆபத்தை உணர்ந்து மாணவர்கள் செயல்பட வேண்டும் என்றார்.