கெட்டுப்போன இறைச்சி விற்ற 5 ஓட்டல்களுக்கு நோட்டீஸ்
ஊட்டியில் கெட்டுப்போன இறைச்சி விற்ற 5 ஓட்டல்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுத்தனர்.
ஊட்டி
ஊட்டியில் கெட்டுப்போன இறைச்சி விற்ற 5 ஓட்டல்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுத்தனர்.
கடைகளில் சோதனை
கேரளாவில் கடந்த ஆண்டு துரித உணவான ஷவர்மா சாப்பிட்ட 16 வயது சிறுமி உயிரிழந்தார். இந்தநிலையில் நாமக்கல்லில் தனியார் ஓட்டலில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஷவர்மா விற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஷவர்மா மற்றும் இறைச்சி விற்பனை கடைகளின் நிலை குறித்து அறிய ஆய்வு செய்யுமாறு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகுமார், சிவராஜ் ஆகியோர் நேற்று ஊட்டியில் உள்ள இறைச்சி கடைகள் மற்றும் ஷவர்மா விற்பனை செய்யும் ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
ஊட்டி கமர்சியல் சாலை, மார்க்கெட் உள்பட பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 5 ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கெட்டுப்போன 32 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சுரேஷ் கூறுகையில், இறைச்சியை முறையாக பதப்படுத்தாவிட்டாலும், வேக வைக்காவிட்டாலும் நஞ்சு பாக்டீரியா உருவாகி விடுகிறது. முறையாக வேக வைக்காமல் சாப்பிடும் போது, உயிர்கொல்லியாக மாறி விடுவதால் இதுபோன்ற இறப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றன. எனவே, இறைச்சியை வாங்குவதில் இருந்து அதை வேக வைப்பது வரை சரியான நடைமுறைகளை கடைக்காரர்கள் கடைபிடிக்க வேண்டும். கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.