முதியோர் காப்பகத்துக்கு நோட்டீஸ்


முதியோர் காப்பகத்துக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 6 Aug 2023 4:00 AM IST (Updated: 6 Aug 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே தென்சங்கம்பாளையத்தில் அனுமதி இல்லாமல் செயல்படும் முதியோர் காப்பகத்துக்கு சமூக நலத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே தென்சங்கம்பாளையத்தில் அனுமதி இல்லாமல் செயல்படும் முதியோர் காப்பகத்துக்கு சமூக நலத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

அதிகாரிகள் குழு ஆய்வு

பொள்ளாச்சி அருகே உள்ள தென்சங்கம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான முதியோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகம் உரிய அனுமதி பெறாமல் செயல்படுவதாக கோவை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து போலீசார், சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழுவினர் அந்த விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது காப்பகம் உரிய ஆவணங்கள் இல்லாமலும், அனுமதி பெறாமல் செயல்படுவது தெரியவந்தது. இதை தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் உரிய அனுமதி பெற வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கி அறிவுறுத்தினர்.

இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

அனுமதி பெற கோரி நோட்டீஸ்

பொள்ளாச்சி அருகே ஆழியாறில் தனியார் முதியோர் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பக கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் சமூக நலத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து தென்சங்கம்பாளையத்தில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்து உள்ளனர். தற்போது அங்கு 45 முதியவர்கள் தங்கி இருக்கின்றனர். இதற்கிடையில் சமூக நலத்துறைக்கு வந்த புகாரை தொடர்ந்து முதியோர் காப்பகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் அனுமதி பெறாமல் காப்பகம் செயல்படுவது தெரியவந்தது. ஒரே வளாகத்தில் மாணவர் விடுதியும் செயல்படுவதாக வந்த புகாரிலும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மாணவர் விடுதிக்கும், முதியோர் காப்பகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும் தெரியவந்தது. மேலும் தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, கட்டிட அனுமதி ஆகியவற்றை பெற்று உரிய ஆவணங்களுடன் சமூக நலத்துறையில் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

1 More update

Next Story