ராமநாதபுரத்தில் விற்பனைக்காக குவிந்த நாவல் பழங்கள்
சீசன் தொடங்கியுள்ளதை தொடர்ந்து ராமநாதபுரத்தில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள நாவல் பழங்கள் 1 கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சீசன் தொடங்கியுள்ளதை தொடர்ந்து ராமநாதபுரத்தில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள நாவல் பழங்கள் 1 கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
நாவல் பழங்கள்
இயற்கையாகவே மனிதர்களுக்கு தேவையான அதிகமான சத்துக்கள் பழங்களில் தான் உள்ளது. ஒவ்வொரு வகையான பழங்களில் ஒவ்வொரு விதமான சத்துக்களும் உள்ளது. பழவகைகளில் நாவல் பழங்களும் மருத்துவ குணமுடைய மனித உடலுக்கு தேவையான அதிக சத்து தரக்கூடியது. ஆனால் தமிழகத்தில் தற்போது நாவல் மரங்களை பார்ப்பது என்பதே மிக அரிதாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
இதனிடையே மதுரையில் இருந்து கொண்டுவரப்பட்டு ராமநாதபுரத்தில் சந்தை பகுதிகளில் விற்பனைக்காக நாவல் பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
200 ரூபாய்க்கு விற்பனை
1 கிலோ நாவல்பழங்கள் ரூ.200-ம், கால் கிலோ நாவல் பழம் ரூ.50 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது குறித்து பழ வியாபாரி அமுதா கூறியதாவது:-
கோடை காலத்தில் மே, ஜூன், ஜூலை மாதத்தில் தான் நாவல் பழ சீசன் ஆகும். தற்போது சீசன் தொடங்கியுள்ளது.நாவல் பழம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் அதிக மருத்துவ குணம் கொண்டது. அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் நாவல் பழத்தை அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது தான் சீசன் தொடங்கியுள்ளதால் நாவல் பழத்தின் விலையும் அதிகமாகவே உள்ளது. கால் கிலோ பழம் ரூ.50, ஒரு கிலோ ரூ.200 என உள்ளது. நாவல் பழத்தை விரும்பி சாப்பிட அதிகமானோர் மிகுந்த ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பிரச்சினைகள் நீங்குவதுடன் சிறுநீர்ப்பை பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது அதுபோல் சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள் நாவல் பழத்தினை சாப்பிடுவதோடு அதன் விதையை பொடியாக்கி தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கல் கரைந்து விடும் என்றும் கூறப்படுகின்றது.