கள அளவையர் பணிக்கு டி.என்.எஸ்.சி.வி.டி. வழங்கும் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்களையும் அனுமதிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்


கள அளவையர் பணிக்கு டி.என்.எஸ்.சி.வி.டி. வழங்கும் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்களையும் அனுமதிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
x

கள அளவையர் உள்ளிட்ட பணிகளுக்கு டி.என்.எஸ்.சி.வி.டி. வழங்கும் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்களையும் அனுமதிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள கள அளவையர் உள்ளிட்ட பணிகளுக்கு 1,089 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையில் தேசிய தொழிற்கல்வி மையம் (என்.சி.வி.டி.) வழங்கிய ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.டி.ஐ. படிப்புகளுக்கு என்.சி.வி.டி. போன்று தமிழ்நாடு மாநில தொழிற்கல்வி மையமும் (டி.என்.எஸ்.சி.வி.டி.) சான்றிதழ் வழங்குகிறது. இரு சான்றிதழ்களும் அடிப்படையில் ஒன்று தான். ஆனால், டி.என்.எஸ்.சி.வி.டி. வழங்கும் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கமுடியாது என்று கூறுவது அநீதியானது.

டி.என்.எஸ்.சி.வி.டி. சான்றிதழை மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் உள்ளிட்ட பல தேசிய, சர்வதேச அமைப்புகள் அங்கீகரித்துள்ளன. தமிழக அரசு ஐ.டி.ஐ.களிலும் இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. அத்தகைய சான்றிதழை தமிழக அரசு பணிக்கே ஏற்க மறுப்பது எந்த வகையில் நியாயம்? கள அளவையர் உள்ளிட்ட பணிகளுக்கு டி.என்.எஸ்.சி.வி.டி. வழங்கும் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்களையும் டி.என்.பி.எஸ்.சி. அனுமதிக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிந்து விட்ட நிலையில், திருத்தப்பட்ட ஆள் தேர்வு அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story