என்.டி.சி. தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
சம்பளம் வழங்கக்கோரி கோவை காட்டூரில் உள்ள என்.டி.சி. அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பளம் வழங்கக்கோரி கோவை காட்டூரில் உள்ள என்.டி.சி. அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்.டி.சி. மில் தொழிலாளர்கள்
தேசிய பஞ்சாலை கழகம் (என்.டி.சி.) கட்டுப்பாட்டின் கீழ் கோவையில் 5 மில்கள் உள்ளன. இந்த மில்களில் நிரந்தரமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் வேலை செய்து வந்தனர்.
கொரோனா காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அந்த 5 என்.டி.சி. மில்களும் மூடப்பட்டன.
அப்போது நிரந்தர ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் முழு சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் தொழிலாளர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்படுவதாகவும், கடந்த 2 மாதமாக சம்பளமே வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது.
எனவே தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும், மூடப்பட்ட என்.டி.சி. மில்களை திறக்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை காட்டூரில் உள்ள என்.டி.சி. மில் தென்மண்டல அலுவலகம் முன்பு நேற்று காலையில் பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் திரண்டனர்.
காத்திருப்பு போராட்டம்
பின்னர் அவர்கள் அந்த அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், ஆலையை திறப்பது, சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இது குறித்து என்.டி.சி. மில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தென்பிராந்திய ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.ராஜாமணி கூறியதாவது:-
தமிழகத்தில் மொத்தம் 7 என்.டி.சி. மில்கள் உள்ளன. அதில் கோவையில் 5 மில்கள் இருக்கிறது. இந்த மில்கள் மூடப்பட்டு உள்ளதால் தினமும் ரூ.1 கோடியே 75 லட்சம் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வருகிறது.
தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்பட வில்லை. கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி போனஸ் வழங்கவில்லை.
போனஸ் வழங்க வேண்டும்
எனவே எங்களின் முக்கிய கோரிக்கையாக தீபாவளிக்கு முன்பு தொழிலாளர்களுக்கு 2 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். போனஸ் வழங்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம்.
எங்கள் கோரிக்கையை என்.டி.சி. மில்களின் நிர்வாக அதிகாரி ஏற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து உள்ளார். எனவே தீபாவளிக்குள் எங்களின் கோரிக்கை நிறைவேறும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.