போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடமலைக்குண்டு அருகே மயிலாடும்பாறையில் அமைக்கப்பட்டு இருந்த நாம் தமிழர் கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றிய நபர்களை கைது செய்யக்கோரி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதற்கு மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், ஜெயபால் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையை தொடர்ந்து நிர்வாகிகள் சிலர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கும் தங்களின் கட்சிக்கொடி கம்பத்தை அகற்றிய நபர்களை கைது செய்யக்கோரி மனு கொடுத்தனர்.






