நாய் வளர்ப்பதில் தகராறு அணுமின் நிலைய ஊழியருக்கு கத்திக்குத்து - மற்றொரு ஊழியர் கைது


நாய் வளர்ப்பதில் தகராறு அணுமின் நிலைய ஊழியருக்கு கத்திக்குத்து - மற்றொரு ஊழியர் கைது
x

நாய் வளர்ப்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக அணு மின் நிலைய ஊழியருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக மற்றொரு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரித்தேஷ் ரஞ்சன் (வயது 41). இவர் கல்பாக்கம் அணுவாற்றல் துறையின் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இந்திமொழி பெயர்ப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் அணுவாற்றல் குடியிருப்பு வளாகத்தில் உள்ள தனது வீட்டில் 2 உயர்ரக நாய்களை வளர்த்து வருவதாகவும், அதனை வீட்டில் கட்டிவைத்து வளர்க்காமல் கண்ட இடங்களில் திரிய விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியில் வசிக்கும் மற்ற குடியிருப்பு வாசிகள் அனைவரும் சில தினங்களுக்கு முன்பு ரித்தேஷ்ரஞ்சனிடம் சென்று நாயை கட்டிவைத்து சுகாதார முறையில் வீட்டில் வளர்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

அவர்களை ரித்தேஷ் ரஞ்சன் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் கல்பாக்கம் அணுவாற்றல் துறையின் பொதுப்பணித்துறை அலுவலகத்திலும், கல்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் ரித்தேஷ்ரஞ்சன் மீது புகார் அளித்திருந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது குடியிருப்புக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த சதுரங்கப்பட்டினம் பகுதியை சேர்ந்த மற்றொரு அணுமின் நிலைய ஊழியர் முத்துக்குமாரை, வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே தன்னிடம் இருந்த கத்தியால் முத்துக்குமாரை குத்தி உள்ளார்.

படுகாயம் அடைந்த முத்துக்குமாரை அக்கம்பத்தினர் மீட்டு மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தகவல் அறிந்த கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடசேன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரித்தேஷ் ரஞ்சனை கைது செய்தனர்.


Next Story