நெல் மூட்டைகளை சேமிக்க கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


நெல் மூட்டைகளை சேமிக்க கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x

நெல் மூட்டைகளை சேமிக்க போதுமான இடங்கள் இல்லாததால் சேமிப்பு கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் பெய்து வரும் மழையால், பல இடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமித்து வைக்கத் தேவையான அளவுக்கு கிடங்குகள் இல்லாதது தான் காரணம் எனும் நிலையில், கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

தமிழ்நாட்டில் 2021-22-ம் ஆண்டில் 118 லட்சம் டன் உணவு தானியங்கள் விளைந்துள்ளன. அவற்றில் 80.25 லட்சம் டன் நெல் ஆகும். ஆனால், இதில் பாதியளவு நெல் கூட அரசால் கொள்முதல் செய்யப்படுவதில்லை என்பது தான் வேதனையான உண்மை ஆகும். 2020-21-ம் ஆண்டில் 39.39 லட்சம் டன்னும், 2021-22-ம் ஆண்டில் மார்ச் 31-ந்தேதி வரை 29.48 லட்சம் டன்னும் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் குறைவு என்பது ஒருபுறமிருக்க கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை சேமித்து வைக்க போதுமான கிடங்கு வசதிகள் இல்லை என்பது கூடுதல் உண்மை.

எனவே தமிழ்நாட்டின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட வேண்டும். கிடங்குகளின் எண்ணிக்கை 400 ஆகவும், கொள்ளளவு 30 லட்சம் டன்னாகவும் உயர்த்தப்பட வேண்டும். ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் குறைந்தது 5 ஆயிரம் மூட்டைகள் சேமித்து வைப்பதற்கு வசதிகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story