வால்பாறை வட்டார பகுதியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
வால்பாறை வட்டார பகுதியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
வால்பாறை
வால்பாறையில் உள்ள ஒரு தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகளின் திறனை அதிகரிக்கும் விதமாக 135 ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடங்கியது. இதனை வட்டார கல்வி அலுவலர் வெள்ளிங்கிரி, உதவி வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். மேலும் இந்த பயிற்சி வகுப்பு குறித்து அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜாராம் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக நிலவிய கொரோனா பாதிப்பு காலத்தில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழல் உருவானது. இதனால் அவர்களின் படிக்கும் திறன் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில், கொரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்பை ஈடுகட்டும் வகையில் மாணவ- மாணவிகளுக்கு சலிப்பு ஏற்படாதவாறு பாடப் புத்தகங்களை நடத்த உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக பள்ளியில் மாணவ- மாணவிகளை அரும்பு, மொட்டு, மலர் என்ற மூன்று பிரிவுகளாக பிரித்து அவர்களுக்கு எளிதாக புரியும் வகையிலும், வகுப்புகளுக்கு புத்துணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஆடல், பாடல், நடனம், மற்றும் படக்காட்சிகள் மூலம் பாடங்களை நடத்த பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் என்று கூறினார்.