புதுச்சத்திரம் அருகே விபத்தில் செவிலியர் பலி: நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி கடலூர் கோர்ட்டு நடவடிக்கை


புதுச்சத்திரம் அருகே விபத்தில் செவிலியர் பலி:  நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி  கடலூர் கோர்ட்டு நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரம் அருகே விபத்தில் செவிலியர் பலியான வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

கடலூர்

கடலூர் ஆல்பேட்டை கன்னியகோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் மனைவி கலைவாணி (வயது 37). இவர் புதுச்சத்திரம் அருகே தீர்த்தனகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 8.11.2015 அன்று வேலை முடிந்து தீர்த்தனகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் மெயின்ரோட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் அவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது அரசு பஸ் ஏறி இறங்கியதில் கலைவாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த விபத்தில் நஷ்ஈடு கேட்டு மோகன், அவரது மகன்கள் கடலூர் மோட்டார் வாகன விபத்து சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் வக்கீல்கள் ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் மூலம் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ.53 லட்சத்து 98 ஆயிரத்து 400 நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு வழங்கவில்லை. இதையடுத்து ரூ.82 லட்சம் வழங்கக்கோரி நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த தொகையும் வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று கடலூர் பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.


Next Story