தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை
தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை
அன்னூர்
அன்னூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நர்சு தற்கொலை
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் காவ்யா (வயது 24). பி.எஸ்.சி. நர்சிங் படித்த இவர் அன்னூர்-கோவை ரோட்டில் உள்ள என்.எம். மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்தார்.
இதற்காக அவர் அங்குள்ள மருத்துவமனைக்கு சொந்தமான விடுதி யில் தங்கி தினமும் மருத்துவமனைக்கு சென்று வந்தார். இந்த நிலை யில் காவ்யா திடீரென்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ விடுதியில் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார்.
ஊழியர்கள் அதிர்ச்சி
இதை பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அந்த தனியார் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் கூறும்போது, அந்த மருத்துவமனையில் கடந்த 7 மாதமாக காவ்யா வேலை செய்து உள்ளார். கடந்த சில நாட்களாக அவர் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார். ஆனால் அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வில்லை. அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.