9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொகுப்பூதிய நர்சுகள் உண்ணாவிரத போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட நர்சுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
தொகுப்பூதிய நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி. நர்சுகள் மேம்பாட்டு சங்கம் சார்பில் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாநில தலைவர் சசிகலா தலைமை வகித்தார்.
மாநில இணைச் செயலாளர் அஷ்வினி கிரேஸ், பொதுச்செயலாளர் சுபின், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத் தலைவர் வாசுகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட நர்சுகள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். உண்ணாவிரத போராட்டத்தில் தங்களின் கை குழந்தைகளுடன் நர்சுகள் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் போது சங்கத்தின் பொதுச்செயலாளர் சுபின் நிருபர்களிடம் கூறியதாவது:-
போராட்டம் தொடரும்
எம்.ஆர்.பி. (மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்) நடத்திய தேர்வு மூலமாக தேர்ச்சி பெற்ற 13 ஆயிரம் நர்சுகள் தமிழகம் முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களை பணியில் அமர்த்தியபோது முதலில் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்துகிறோம் பின்னர் பணி நிரந்தரம் செய்கிறோம் என்று அறிவித்தார்கள். அதன்படியே, பணி ஆணைகளும் வழங்கப்பட்டது.
ஆனால், 8 ஆண்டுகள் ஆகிய போதும் இதுவரை 10 ஆயிரம் நர்சுகள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதேபோல, கிராமப்புற நர்சுகளுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவதில்லை. ரூ.14 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வு இன்னும் வழங்கப்படவில்லை.
மருத்துவ கவுன்சிலரின் பரிந்துரையின்படி ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நர்சுகளின் எண்ணிக்கை இல்லை. 4 நர்சுகள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே இருக்கிறார். காலி பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே மக்களுக்கு தடையின்றி சேவையை வழங்க முடியும். 3 ஆயிரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்து வருபவர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும் வரை பல்வேறு வகைகளில் போராட்டம் தொடரும். பொதுமக்களுக்கான சேவை பாதிக்கப்படாத வகையில் எங்களுடைய போராட்டம் அடுத்தடுத்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.






