முதியோர் இல்லங்கள் அனுமதி பெற வேண்டும்


முதியோர் இல்லங்கள் அனுமதி பெற வேண்டும்
x
தினத்தந்தி 28 Jun 2023 11:23 PM IST (Updated: 29 Jun 2023 4:32 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் முதியோர் இல்லங்கள் அனுமதிபெற வேண்டும் என கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.

ராணிப்பேட்டை

பாதுகாப்பு குழு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட பணிக்குழுக் கூட்டம், முதியோர் இல்லங்கள் செயல்பாடுகள் குறித்து முதியோர் நல பாதுகாப்பு குழுக்கூட்டம் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ள இடங்களில் சுகாதாரத் துறை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவி குழுக்கள் ஒன்றிணைந்து பெண் குழந்தைகளை பேணிக் காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிந்து விதிகளை மீறி சிலர் கருக் கலைப்பு மேற்கொண்டு வருகிறார்கள். சமுதாயத்தில் பெண் குழந்தைகள் மீதுள்ள தவறான கருத்தை நாம் மாற்ற வேண்டும்.

விழிப்புணர்வு

பெற்றோர்கள் பெண் பிள்ளைகளுக்கு தீய தொடுதல் குறித்து எடுத்துரைக்க வேண்டும். மேலும் பள்ளி வகுப்பின் போது பெற்றோரின் அனுமதி கோரும் கடிதமின்றி எந்தவொரு பள்ளி மாணவியையும் பள்ளி நேரத்தில் வெளியில் செல்ல அனுமதிக்கக் கூடாது. இந்த நடைமுறையை மீறும் ஆசிரியர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அனைத்து துறைசார்ந்த அலுவலர்கள் தங்களது பகுதிகளில் பெண் குழந்தை திருமணம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அனுமதி பெற வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் முதியோர் இல்லங்களில் முதியோர்களுக்கு முறையாக பராமரிப்பு அளிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் உடனடியாக அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். முதியோர் இல்லங்கள் நடத்திட அனுமதி வேண்டி வரும் விண்ணப்பங்கள் மீது ஒருவார காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மகளிர் உதவி எண் 181, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குறித்த புகார் எண் 1098 மற்றும் முதியோர் உதவி எண் 14567 ஆகிய கட்டணமில்லா உதவி எண்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட சமூக நலன் அலுவலர் பிரேமலதா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், சேவை மைய நிர்வாகி மலர்விழி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story