நீட் தேர்வில் தேசிய அளவில் சாதனை படைத்த பிரபஞ்சன் உள்ளிட்ட 4 தமிழக மாணவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
சென்னை,
2023-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும், தேசிய அளவில் முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.
நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கும், முதல் இடம் பிடித்த மாணவருக்கும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தேசிய அளவில் நீட் தேர்வில் சாதனை படைத்த பிரபஞ்சன் உள்ளிட்ட 4 தமிழக மாணவர்களுக்கு முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டரில் கூறி இருப்பதாவது;
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாளர்கள் J. பிரபஞ்சன் முதலிடத்தையும், கவுசவ் பவுரி மூன்றாவது இடத்தையும், சூரியா சித்தார்த் ஆறாவது இடத்தையும், எஸ் வருண் ஒன்பதாவது இடத்தையும் பெற்றுள்ளனர் என்ற செய்தியறிந்து மிக்க மகிழ்ச்சியுற்றேன்.
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த நால்வருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். வெற்றி பெற்ற இதர மாணவ, மாணவியருக்கும் எனது நல்வாழ்த்துகள்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.