அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி பழனிசாமி உள்பட 22 பேரை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் பதிலடி


அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி பழனிசாமி உள்பட 22 பேரை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் பதிலடி
x

எடப்பாடி பழனிசாமி உள்பட 22 பேரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் பதிலடியாக அறிவித்துள்ளார்.

சென்னை,

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் உள்பட 18 பேரை எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்பட 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் பதிலடியாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைப்பு செயலாளர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், கோகுல இந்திரா, எஸ்.டி.கே.ஜக்கையன், ஆதி ராஜாராம், மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார், தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளர் தியாகராயநகர் சத்யா, தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.கே.அசோக், தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி, சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், நாகை மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

மேலும் அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனுக்கு ஓ.பன்னீர்செல்வம் மனுவும் அனுப்பி உள்ளார்.

அதில், '13-ந்தேதி அ.தி.மு.க.வில் பல்வேறு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நியமித்து இருப்பதாக அறிந்தேன். எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் புதிய நிர்வாகிகளை நியமித்து சட்டவிரோதமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நியமனங்களை செயல்படுத்த அனுமதிக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.


Next Story