மூதாட்டி உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு; மயானத்தில் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு
களக்காடு அருகே மூதாட்டி உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மயானத்தில் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
களக்காடு:
களக்காடு அருகே வேதநாயகபுரம் கிராம மக்கள், அங்குள்ள கழுத்தருத்தான் பொத்தை அருகில் உள்ள இடத்தை இடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த மயானத்தை தனிநபர் சொந்தம் கொண்டாடி வருகிறார். இதுதொடர்பாக அவர், கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வேதநாயகபுரத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து அவரது உடலை மயானத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.இதற்கு அந்த தனிநபர் எதிர்ப்பு தெரிவித்ததால், மயானத்தில் குழி தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் மயானத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே நாங்குநேரி தாசில்தார் விஜய் ஆனந்த், களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சமால், சப்-இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இறந்த மூதாட்டியின் உடல் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.