குப்பை சேமிப்பு கிடங்கு அமைக்க எதிர்ப்பு: மண்எண்ணெய் கேனுடன் வந்து பொதுமக்கள் போராட்டம்
விழுப்புரம் அருகே குப்பை சேமிப்பு கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மண்எண்ணெய் கேனுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வளவனூர்,
விழுப்புரம் அருகே வளவனூர் குமாரகுப்பம் காலனிக்கு அருகில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை சேமிப்பு கிடங்கு அமைத்து அங்கு வளவனூர் பேரூராட்சி பகுதியில இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து உரமாக்கி விவசாய பயன்பாட்டுக்காக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்காக குமாரகுப்பம் காலனி அருகில் கடந்த 10.5.2023 அன்று குப்பை சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இங்கு குப்பை கிடங்கு அமைந்தால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரக்கூடும் என்றுகூறி அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
பொதுமக்கள் போராட்டம்
இந்நிலையில் நேற்று மீண்டும் குப்பை சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான பணி நடந்தது. இதையறிந்ததும் குமாரகுப்பம் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மண்எண்ணெய் கேனுடன் அங்கு திரண்டு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அங்கு அதிகாரிகள் யாரும் வராததால் அவர்கள் அனைவரும் அங்கேயே அமர்ந்து திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இப்பணிகளை உடனடியாக நிறுத்தாவிட்டால் இங்கேயே மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொள்வோம் என்று மிரட்டல் விடுத்தனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுபற்றி வளவனூர் பேரூராட்சி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை பணிகளை நிறுத்தி வைப்பதாகவும் போலீசார் உறுதியளித்தனர்.
அதன் பிறகு அப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.