கல்லறை திருநாள் அனுசரிப்பு


கல்லறை திருநாள் அனுசரிப்பு
x

வாணாபுரம், வேட்டவலம், போளூர் பகுதிகளில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

திருவண்ணாமலை

வாணாபுரம், வேட்டவலம், போளூர் பகுதிகளில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கல்லறை திருநாள்

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இறந்துபோன தங்களின் முன்னோர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 2-ந்தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகிறார்கள். அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை அடக்கம் செய்த கல்லறைகளை சுத்தம் செய்து, வர்ணம் பூசி, வண்ண மலர்களால் அலங்கரிப்பார்கள். பின்னர் அந்தந்த பகுதி தேவாலய பங்குதந்தை, ஆயர் மூலம் கல்லறை தோட்டங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்படும். தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அந்த வகையில் இந்தாண்டு கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம், அள்ளிக்கொண்டப்பட்டு, தென்கரும்பலூர், அந்தோணியார்புரம், பெருந்துறைப்பட்டு, விருது விளங்கினான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டத்துக்கு கிறிஸ்தவர்கள் சென்று தங்களது முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து வண்ண மலர்கள் மற்றும் மாலைகளால் அலங்கரித்தனர்.

பின்னர் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதனையடுத்து கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர். கல்லறை திருநாளை முன்னிட்டு சாமந்திப்பூ கிலோ ரூ.300 முதல் ரூ.500 வரையும், சம்மங்கி ரூ.400 முதல் ரூ.600 வரையும் விற்பனையானது.

வேட்டவலம்


வேட்டவலத்தில் கல்லறை திருநாளையொட்டி திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ள கல்லறை தோட்டத்துக்கு கிறிஸ்தவர்கள் சென்று அங்கு தங்களது முன்னோர்களின் கல்லறைகளை தூய்மைப்படுத்தி மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

அதை தொடர்ந்து கல்லறை தோட்டத்தில் வேட்டவலம் புனித மரியாவின் தூய நெஞ்ச ஆலய பங்கு தந்தை ஆரோக்கியசாமி சிறப்பு கூட்டு திருப்பலி நடத்தினார்.

இதே போல வேட்டவலம் மறை வட்டத்திற்கு உட்பட்ட ஆவூர், ஜமீன்கூடலூர், நா.கெங்கப்பட்டு, சாணிப்பூண்டி ஆகிய பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறைகளுக்கு மாலை அணிவித்து, மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்து கல்லறை திருநாளை அனுசரித்தனர்.

போளூர்


போளூர்-சென்னை சாலையில் உள்ள கல்லறை தோட்டத்துக்கு கிறிஸ்தவர்கள் சென்று தங்களது முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து மலர் மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

அதைத் தொடர்ந்து பாதிரியார் செபாஸ்டீன் பிரான்சிஸ் திருப்பலி நடத்தினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story