சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு


சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 26 Dec 2022 6:45 PM GMT (Updated: 26 Dec 2022 6:46 PM GMT)

நாகையில் நேற்று 18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது கடற்கரையில் அமர்ந்து பெண்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்:

நாகையில் நேற்று 18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது கடற்கரையில் அமர்ந்து பெண்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சுனாமி நினைவு தினம்

தமிழக கடலோர மாவட்டங்களில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். குறிப்பாக தமிழகத்திலேயே நாகை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி பேரலைகள் தாக்கியதன் 18-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி நாகை மாவட்டத்தில் நாகை நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நாகூர், பட்டினச்சேரி, சாமந்தான்பேட்டை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு கடலோர பகுதிகளில் சுனாமியில் இறந்தவா்களுக்கு உறவினா்கள் தர்ப்பணம் செய்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் கடலோர பகுதிகளில் இறந்தவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றினர்.

மவுன ஊர்வலம்

நாகையை அடுத்த கீச்சாங்குப்பத்தில் நினைவு தூண் முன்பு பொதுமக்கள் சார்பில் ஆத்மசாந்தி யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் நினைவு தூணில் மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் மாணவ- மாணவிகளின் மவுன ஊர்வலம் நடந்தது. பின்னர் பள்ளியில், சுனாமியில் உயிரிழந்த மாணவ, மாணவிகளின் உருவப்படத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அக்கரைப்பேட்டை மீனவ கிராமம் சார்பில் டாடா நகர் சுனாமி குடியிருப்பில் இருந்து மவுன ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று அக்கரைப்பேட்டை கடற்கரையில் நிறைவடைந்தது. பின்னர் அங்குள்ள நினைவு தூணில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடற்கரையில் கதறி அழுதனர்

நாகை நம்பியார் நகர் மீனவ கிராம சமுதாயக்கூடத்தில் உள்ள சுனாமி நினைவு தூணில் மக்கள் மலா் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவா்கள் ஊா்வலமாக கடற்கரைக்கு வந்து அங்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அப்போது மீனவ பெண்கள், உறவினர்களை பறிகொடுத்த சோகத்தில் கடற்கரையில் அமர்ந்து கடலைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனா்.அப்போது சுனாமி பேரலை தாக்கி 18 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இன்னமும் அந்த சோக சுவடுகள் மாறவில்லை என்றும், பலியானவர்கள் தங்கள் நினைவுகளை விட்டு நீங்காமல் என்றைக்கும் நிலைத்திருப்பார்கள் என்றும் மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

கலெக்டர் அஞ்சலி

நாகை கலெக்டர் அலுவலகத்தில் சுனாமி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அங்கு உள்ள சுனாமி நினைவு தூணில் கலெக்டர் அருண் தம்புராஜ் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார்.எம்.எல்.ஏ.க்கள் முகமது ஷாநவாஸ், நாகை மாலி, தாட்கோ வாரிய தலைவர் மதிவாணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தி.மு.க.-அ.தி.மு.க.வினர் அஞ்சலி

நாகையில், தி.மு.க. சார்பில் சுனாமி நினைவு தின மவுன ஊர்வலம் மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமையில் நடந்தது. நகர தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கி, ஆரியநாட்டு கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு தூணில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து அங்குள்ள கடற்கரையில் பால் ஊற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.அதேபோல் அ.தி.மு.க. சார்பில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் தங்க கதிரவன் முன்னிலை வகித்தார். அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர் உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் உள்ள சுனாமி நினைவு தூணில் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.

வேளாங்கண்ணி

வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரையில் சுனாமியில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று 18-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அங்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் கடற்கரையில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டது. முடிவில் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது இறந்தவர்களின் உறவினர்கள், உணவு பண்டங்கள் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.பகவத்கீதை, குரான், பைபிள் வசனங்கள் படிக்கப்பட்டு இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யப்பட்டது. முன்னதாக பேராலயத்தில் காலை 7 மணிக்கு பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் பொருளாளர் உலகநாதன், உதவிப் பங்குத்தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ், வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், செயல் அலுவலர் பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம்

வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் நமச்சிவாயம், ஒன்றிய செயலாளர் சுப்பையன், ஒன்றியக் குழு தலைவர் கமலா அன்பழகன், நகர துணைசெயலாளர் சுரேஷ்பாபு, முன்னாள் நகர செயலாளர் ஜெகநாதன், ஜமாத் மன்ற துணை தலைவர் அமானுல்லா மற்றும் மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்துகொண்டனர். இதே போல் வேதாரண்யம் நகரசபை தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராகிம், வக்கீல் அன்பரசன், மீன்துறை ஆய்வாளர் நடேச ராஜா, கிராம பஞ்சாயத்தார் ராஜேந்திரன், முருகன் ஆகியோரும் ஆறுகாட்டுத்துறையில் அஞ்சலி செலுத்தினர். கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி, நாகூர் பட்டினச்சேரி, சம்பாதோட்டம் உள்ளிட்ட இடங்களிலும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.


Next Story