காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும்; ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி


காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும்; ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி
x

காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார்.

திருவண்ணாமலை

காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார்.

வணிகர் தின விழா

திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்க 37-ம் ஆண்டு வணிகர் தின விழா திருவண்ணாமலையில் உள்ள மாதவி பன்னீர்செல்வம் திருமண மகாலில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்துகொண்டார். முன்னதாக அவர் கூறியதாவது:-

வருகிற மே 5-ந்தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள வணிகர் தின மாநில மாநாட்டிற்கு வணிகர் உரிமை முழக்க மாநாடு என்ற தலைப்பு வைத்து உள்ளோம். மத்திய, மாநில அரசுகள் சாமானிய வியாபாரிகளை காப்பாற்றும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என இந்த மாநாட்டில் பிரகடன தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், சாமானிய வணிகர்களை வேறு பார்வையிலும் பார்க்கின்றது. சாமானிய வியாபாரிகள் மீது ஒரு பார்வையும், கார்ப்பரேட் வியாபாரிகள் மீது ஒரு பார்வையும் மத்திய அரசு பார்ப்பதை தொடர்ந்து வணிகர் பேரமைப்பு எதிர்த்து கொண்டு வருகின்றது. மேலும் ஆன்லைன் வர்த்தகத்தால் சாமானிய வியாபாரிகள் தடுமாறி வருகின்றனர்.

வடமாநில தொழிலாளர்கள்

குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத்தை கட்டாயமாக தடை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியும் கூட இங்குள்ள இளைஞர்கள், சாமானியர்கள், வணிகர்கள் என பலர் இதனால் உயிரை மாய்த்து வருகின்றனர். எனவே மத்திய அரசு அந்த தடை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மேலும் கவர்னர் உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும்.

வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் இல்லை என்று சொன்னால் இங்குள்ள தொழில் கூடாரங்கள் காலியாகி விடும். சுமார் 70 சதவீத அளவிற்கு தொழில் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். சிலர் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். தமிழக அரசும், காவல்துறையும் வடமாநில தொழிலாளர்களுக்கு முழு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

சுங்கச்சாவடி கட்டண உயர்வால் வியாபாரிகள் மட்டுமல்லாது பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய மந்திரி நிதின்கட்காரி காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடப்படும் என்று சொன்னது சொன்னபடியாகவே உள்ளது. உடனடியாக காலாவதியான சுங்கச்சாவடி அனைத்தையும் மூட வேண்டும்.

வாகனங்களை நிறுத்தி சோதனை

நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள கடைகளில் வரி உயர்வை முறைப்படுத்த தனியாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் விரைவில் நல்ல தீர்வு காணப்படும். வணிகவரி துறையினர் வணிகர்களின் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தி வருவதை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று வணிகர்கள் பாதிக்காத வண்ணம் செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவுக்கு தலைவர் டி.எம்.சண்முகம் தலைமை தாங்கினார். செயலாளர் சங்கர் வரவேற்றார். பொருளாளர் ரத்தினவேல் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்தார். முன்னாள் தலைவர்கள் வடிவேலு, பிச்சாண்டி, உபாத்தியாயா, மாவட்ட தலைவர் மண்ணுலிங்கம், மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகர், மாநில இணை செயலாளர் செந்தில்மாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேலூர் மாவட்ட தலைவர் ஞானவேல், வணிகர் பேரமைப்பு மாநில செயலாளர் கோவிந்தராஜுலு பேசினர். இறுதியாக மாநில வணிகர் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து வணிகர் அறக்கட்டளை சார்பாக நலிந்த வியாபாரிக்கு ரூ.20 ஆயிரம் உதவித்தொகையும், 19 பேருக்கு மாதாந்திர பென்ஷனும் வழங்கப்பட்டது.

விழாவை சித்தார்த்தன், கபிலன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முன்னதாக திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலையில் இருந்து வணிகர் தின விழா நடைபெற்ற மண்டபம் வரை வணிகர்கள் ஊர்வலமாக வந்தனர்.


Next Story