கள்ளக்காதலியை திருமணம் செய்ய இடையூறு: 3 வயது குழந்தை அடித்துக்கொலை - தர்மபுரியில் அதிர்ச்சி


கள்ளக்காதலியை திருமணம் செய்ய இடையூறு: 3 வயது குழந்தை அடித்துக்கொலை - தர்மபுரியில் அதிர்ச்சி
x

கள்ளக்காதலியை திருமணம் செய்ய இடையூறாக இருப்பதாக கருதி 3 வயது குழந்தையை அடித்துக்கொலை செய்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏர்கொல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 30). சிவில் என்ஜினீயர். இவருக்கும், அதியமான்கோட்டை அருகே முண்டாசு புறவடை பகுதியை சேர்ந்த பிரியா (24) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சஷ்வந்த் (6), தர்ஷன் (3) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் பிரியா தூங்கி கொண்டிருந்தார். சஷ்வந்த், தர்ஷன் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வடமாநில கும்பல் குழந்தை மற்றும் சிறுவனை கடத்தி சென்றுவிட்டதாக கிராமத்தில் தகவல் பரவியது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சேகர் மகனான லாரி டிரைவர் வெங்கடேஷ் (27) என்பவர் வடமாநில கும்பலிடம் இருந்து சஷ்வந்த், தர்ஷன் ஆகியோரை மீட்டு கரட்டு பகுதியில் இருந்து படுகாயங்களுடன் கொண்டு வந்ததாக கிராம மக்களிடம் தெரிவித்தார். ஆனால் அவர் மீது சந்தேகம் அடைந்த கிராம மக்கள் அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தை மற்றும் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை தர்ஷன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். சஷ்வந்த் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வெங்கடேசிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் வெங்கடேஷ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

அதில், பிரியாவிற்கும், எனக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம். தற்போது எனக்கு கல்யாணம் செய்ய வீட்டில் பெண் பார்த்து வந்தனர். இதனால் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என பிரியாவிடம் கூறினேன்.

அதற்கு அவர் மறுத்ததுடன் தான் 2 குழந்தைகள் மற்றும் கணவரோடு ஓசூருக்கு செல்ல உள்ளதாகவும், அதனால் தன்னை சந்திக்க வர வேண்டாம் என கூறினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 2 குழந்தைகள் இல்லாமல் இருந்தால் அவள் என்னுடன் வந்திருப்பாள் என கருதினேன். எனவே பிரியாவின் 2 குழந்தைகளையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

அதன்படி நேற்று வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சஷ்வந்த், தர்ஷனை கரட்டுபகுதிக்கு அழைத்து சென்றேன். பின்னர் 2 பேரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி தலை, காது பகுதிகளில் கற்களை வைத்து அடித்தேன். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து மயங்கினர்.

பின்னர் அவர்களை வடமாநில கும்பலிடம் இருந்து காப்பாற்றி வருவது போல் கிராம மக்களை நம்ப வைக்க முயன்றேன். ஆனால் கிராம மக்கள் நம்பவில்லை. ஏனெனில் சிறுவர்களை அழைத்து செல்லும்போது கிராம மக்கள் பார்த்து விட்டனர். பின்னர் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் போலீசாரிடம் சிக்கி கொண்டேன் என வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர். மேலும் சிறுவர்களின் தாய் பிரியாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலியை திருமணம் செய்ய இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை டிரைவர் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story