சூளகிரி அருகே பரபரப்பு:மின்வாரிய அலுவலகத்தில் ரூ.3 லட்சம் மின்கம்பிகள் திருட்டுமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


சூளகிரி அருகே பரபரப்பு:மின்வாரிய அலுவலகத்தில் ரூ.3 லட்சம் மின்கம்பிகள் திருட்டுமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 5 May 2023 7:00 PM GMT (Updated: 5 May 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே மின்வாரிய அலுவலகத்தில் ரூ.3 லட்சம் மின்கம்பிகள் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மின்வாரிய அலுவலகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கொல்லப்பள்ளியில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கொல்லப்பள்ளி, சின்னாறு, முருகனப்பள்ளி, மேடுப்பள்ளி, இம்மாடிநாயக்கனபள்ளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். மேலும் இங்கு புதிய மின்மாற்றி மாற்றுவதற்கு உண்டான செம்பு கம்பிகள் உள்பட பல்வேறு மின்சாதன பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த அலுவலகத்தில் அதே பகுதியை சேர்ந்த லைன்மேன் முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு வெளியே சென்றார். பின்னர் இரவு 1 மணிக்கு மீண்டும் அலுவலகம் வந்து பார்த்தபோது அலுவலக கதவின் பூட்டு உடைக்கப்பட்டும், வெளிப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த புதிய மின்மாற்றிகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டும் கிடந்தன.

ரூ.3 லட்சம் பொருட்கள் திருட்டு

பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது அலுவலகம் முழுவதும் பொருட்கள் சூறையாடப்பட்ட நிலையில் சிதறி கிடந்தன. இதுகுறித்து முருகன் உதவி செயற்பொறியாளர் பழனிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது புதிய மின்மாற்றிகளில் இருந்த சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள செம்பு கம்பிகள் மற்றும் மின்சாதன பொருட்கள், ஆவணங்கள் ஆகியவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பழனி சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story