குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பெண் ஊழியர் உள்பட 2 பேர் கைது
கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி பெண் ஊழியர் உள்பட 2 பேரை கைது செய்தனர். கே.ஜி. சாவடி போக்குவரத்து சோதனைச்சாவடியில் ரூ.33 ஆயிரம் சிக்கியது.
போத்தனூர்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி பெண் ஊழியர் உள்பட 2 பேரை கைது செய்தனர். கே.ஜி. சாவடி போக்குவரத்து சோதனைச்சாவடியில் ரூ.33 ஆயிரம் சிக்கியது.
இது குறித்து கூறப்படுவதாவது:-
அனுமதி சான்றிதழ்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் 2-வது மாடியில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் உள்ளது.
இங்குள்ள அலுவலர்கள், கோவை பகுதிகளில் உள்ள காப்பகங்களை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்கள்.
இங்கு குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராக தனலட் சுமி, சட்ட உதவியாளராக கார்த்திக் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள், காப்பகத்தில் உள்ள ஒரு குழந்தையை வீட்டுக்கு அனுப்ப அனுமதி சான்றிதழ் கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு திவ்யாவிடம் புகார்செய்யப்பட்டது.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று மாலை அந்த அலுவலகத்தை கண்காணித்தனர். அப்போது தன லட்சுமி, கார்த்திக் ஆகியோர் ரூ.5 ஆயிரம் லஞ்சப்பணத்தை வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.
மேலும் அங்கு அதிரடியாக 3 மணிநேரம் போலீசார் சோதனை நடத்தினர்.
மேலும் அங்கிருந்த ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து பிடிபட்ட தனலட்சுமி, கார்த்திக் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கே.ஜி.சாவடியில் பணம் பறிமுதல்
கோவையை அடுத்தமதுக்கரை அருகே கே.ஜி. சாவடியில் வட்டார போக்குவரத்து சோதனைச்சாவடி உள்ளது. இந்த வழியாக கேரளாவுக்கு செல்லும் சரக்கு வாகனங்களை சோதனை செய்து உரிய பெர்மிட் அடிப்படையில் பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா? என்று சோதனை செய்வது வழக்கம்.
அப்போது அங்குள்ள வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாகன ஓட்டுனர்களிடம் லஞ்சம் வாங்குவ தாக புகார்கள் வந்தன.
இதனால் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பரிமளா தேவி, லதா ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று மாலை 5 மணிமுதல் இரவு 7.30 மணிவரை அந்த சோதனைச்சாவடியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து கணக்கில் வராத பணம் ரூ.32 ஆயிரத்து 680 பறிமுதல் செய்யப்பட்டது.
2 பேர் மீது வழக்கு
இது தொடர்பாக கே.ஜி.சோதனைச்சாவடி மோட்டார் வாகன ஆய்வாளர் ஈஸ்வரி, உதவியாளர் யுவராஜ் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே இந்த சோதனைச்சாவடியில் லஞ்சம் வாங்குவதாக பலமுறை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தப்பட்டு, பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.