கேமராக்கள், சென்சார் வசதி உள்ளதா என அதிகாரி ஆய்வு


கேமராக்கள், சென்சார் வசதி உள்ளதா என அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 22 Nov 2022 7:00 PM GMT (Updated: 22 Nov 2022 7:00 PM GMT)

தனியார் பள்ளி வாகனங்களில் சென்சார் வசதி, கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என்று அதிகாரி ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

தனியார் பள்ளி வாகனங்களில் சென்சார் வசதி, கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என்று அதிகாரி ஆய்வு செய்தார்.

சென்சார் வசதி

தனியார் பள்ளிகளில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வரும் வாகனங்களில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் இதுகுறித்து பள்ளி திறப்பதற்கு முன் ஆய்வு நடத்தப்பட்டு, குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் குழந்தைகள் உயரம் குறைவாக இருப்பதால் வாகனங்களுக்கு முன்னால், பின்னால் செல்லும்போது டிரைவர்களுக்கு தெரிவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதைதடுக்க பள்ளி வாகனங்களில் வாகனத்தின் முன்பும், பின்பும் கேமராக்கள், சென்சார் வசதியுடன் பொருத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து தற்போது பள்ளி வாகனங்களில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அதிகாரி ஆய்வு

பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பள்ளி வாகனங்கள் கொண்டு வரப்பட்டு, அங்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் வாகனங்களை ஆய்வு செய்தார். அப்போது சென்சார் வசதி, கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது வாகனத்தில் டிரைவர்கள் கேமராக்கள் பார்ப்பதற்கு வைக்கப்பட்டு உள்ள சிறிய அளவிலான கணினியில் சரியாக தெரியாததால் ஒரு வாகனத்தை திருப்பி அனுப்பி, அதை சரிசெய்து கொண்டு வருவதற்கு உத்தரவிடப்பட்டது. அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் உடன் இருந்தார்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறியதாவது:-

பாதுகாப்பு வசதிகள்

பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் உள்ளதா, என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விபத்துகளை தடுக்க பள்ளி வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் கேமராக்கள், சென்சார் வசதியுடன் பொருத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகாக்களில் 66 பள்ளிகளில் 345 வாகனங்கள் உள்ளன. ஏற்கனவே வாகனங்களுக்குள் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்களின் செயல்பாடுகள் பள்ளி நிர்வாகத்தின் கட்டுபாட்டில் உள்ளது.

உரிமம் ரத்து

தற்போது வாகனத்தின் முன்பும், பின்பும் சென்சார் வசதியுடன், கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இதன் மூலம் 3 அடி உயரத்துக்கு மேல் உள்ளவர்கள் வந்தால் சத்தம் கேட்கும். மேலும் கேமராவிலும் ஆட்கள் வருகிறார்களா? என்பதை பார்த்து இயக்க முடியும். வாகனத்தில் இருந்து 2 மீட்டர் தூரத்திற்குள் வாகனம், ஆட்கள் இருந்தாலும் சென்சார் தெரியப்படுத்தி விடும். இந்த செயல்பாடுகள் வாகனத்தில் உள்ள சிறிய அளவிலான கணினியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அதில் 2 ஜி.பி. வரை சேமித்து வைக்கும் வசதி உள்ளது. இதன் மூலம் டிரைவர் தவறு செய்தாரா? என்பதை பார்த்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க முடியும். தற்போது வரை 100 பள்ளி வாகனங்களில் சென்சார் வசதியுடன், கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள வாகனங்களுக்கு 10 நாட்கள் காலஅவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு பொருத்தவில்லை என்றால் சோதனை அறிக்கை வழங்கப்படும். அதை தொடர்ந்து உரிமம் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story