வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பருத்தி வயல்களை அதிகாரிகள் ஆய்வு


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பருத்தி வயல்களை அதிகாரிகள் ஆய்வு
x

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பருத்தி வயல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கருப்பூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 7 கண் மதகு வழியாக விவசாய நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததால், சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி வயல்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானதாகவும், அதற்குரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகளின் கோரிக்கை விடுத்தது தொடர்பாகவும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிச்சாமி, தா.பழூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அசோகன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், கோடாலி கருப்பூர் கிராமத்தில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பருத்தி வயல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது விவசாயிகள் வெள்ளநீரில் அழுகி நாசமான பருத்திச் செடிகளை, அதிகாரிகளிடம் காண்பித்து தங்களது வேதனையை தெரிவித்தனர். விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்த அதிகாரிகள், அவர்களது கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பதாக உறுதி அளித்தனர்.

மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து ஏழு கண் மதில் சரியாக செயல்படாத கதவணைகளை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.


Next Story