ஒகேனக்கல் குடிநீரை நிரப்பிய மீன் குட்டையில் அதிகாரிகள் ஆய்வு
நல்லம்பள்ளி
தர்மபுரி மாவட்டம், மானியதஅள்ளி ஊராட்சி மலையப்ப நகரில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இக்கிராம மக்கள், குடிநீர் தேவைக்காக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து அதன் மூலம் ஒகேனக்கல் குடிநீர் வழங்கி வருகிறது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, குழாய் அமைத்து ஒகேனக்கல் குடிநீரை அப்பகுதியை சேர்ந்த சிலர் மீன்குட்டைகளுக்கு விட்டு மீன்களை வளர்த்து வந்தனர். இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மீன்குட்டை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், துணையாக இருந்த பெண் டேங்க் ஆபரேட்டரை பணி நீக்கம் செய்ய கோரியும், கடந்த வாரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் தொப்பூர் போலீசார் அந்த பகுதிக்கு சென்று மீன் குட்டைகளை பார்வையிட்டனர். அப்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய் அமைத்து 4 மீன் குட்டைகளுக்கு முறைகேடாக ஒகேனக்கல் குடிநீரை நிரப்பியது தெரிய வந்தது. இதையடுத்து பெண் டேங்க் ஆபரேட்டரை தற்காலிக பணி நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் உத்தரவிட்டுள்ளார். முறைகேடாக பயன்படுத்திய ஒகேனக்கல் குடிநீருக்கு ரூ.8,189-ஐ அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.