குவாரியில் அதிகாரிகள் ஆய்வு
கூடுதல் மண் எடுப்பதாக புகார்: குவாரியில் அதிகாரிகள் ஆய்வு
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் அருகே மத்தியக்குடியில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் குவாரி அமைக்கப்பட்டு பொக்லின் எந்திரங்களை கொண்டு மண் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு எடுக்கப்படும் மண் குத்தாலம், திட்டச்சேரி வழியாக பனங்குடி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 4 வழிச்சாலை அமைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இங்கு குவாரியில் இருந்து அரசு அனுமதித்ததை விட கூடுதலாக மண் எடுப்பதாக புகார் தெரிவித்த விவசாயிகள், இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படும் என்றும் கவலை தெரிவித்தனர்.
இதையடுத்து நாகை புள்ளியியல் துறை உதவி புவியியலாளர் சேகர், தாசில்தார் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் நேற்று மத்தியக்குடியில் உள்ள குவாரிக்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது உதவி புவியியலாளர் சேகர் கூறியதாவது:-
மத்தியக்குடியில் உள்ள குவாரி மாநில சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு எடுக்கப்படும் மண் 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. அரசு அனுமதித்த 2 மீட்டர் ஆழம் வரைதான் மண் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மண் எடுத்து கரையில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து பார்க்கும்போது ஆழமாக தெரிகிறது. எனவே அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு விதிகளுக்கு உட்பட்டுதான் மண் எடுக்கப்பட்டுள்ளது. விதிமுறை மீறல்கள் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.