பாஸ்தா சாப்பிட்ட கல்லூரி மாணவி சாவு: விழுப்புரம் ஓட்டலில் அதிகாரிகள் ஆய்வு


பாஸ்தா சாப்பிட்ட கல்லூரி மாணவி சாவு:  விழுப்புரம் ஓட்டலில் அதிகாரிகள் ஆய்வு
x

பாஸ்தா சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்ததால் விழுப்புரம் ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அன்னியூரை சேர்ந்த விஜயகுமார் மனைவி பிரதீபா (வயது 22) என்பவர் நேற்று முன்தினம் இரவு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தநிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் விழுப்புரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் வெள்ளை பாஸ்தா என்ற உணவை வாங்கிச் சென்று சாப்பிட்டதால் இறந்ததாக சமூகவலைதளங்களில் பரபரப்பான தகவல் வைரலாகியது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவின்படி அந்த ஓட்டலில் நேற்று மாலை கோலியனூர் வட்டார உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அன்புபழனி தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பத்மநாபன், கதிரவன், பொது சுகாதாரத்துறையின் கோலியனூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாராமன், சுகாதார ஆய்வாளர்கள் கதிரவன், பிருதிவிராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்குள்ள உணவுகளின் தரம், சமைப்பதற்காக வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களின் தரம் சரியான முறையில் இருக்கிறதா என்றும், சுகாதாரமான முறையில் உணவு சமைக்கப்படுகிறதா என்றும் நேற்று முன்தினம் பரிமாறப்பட்ட வெள்ளை பாஸ்தா உணவில் ஏதேனும் பிரச்சினை இருந்ததா? என்று ஆய்வு செய்ததோடு, பாஸ்தா உணவு மாதிரியை எடுத்து கோவையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுகாதாரமான முறையில் உணவு சமைத்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமென்றும், உணவுப்பொருட்களை கொள்முதல் செய்யும்போது உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் பெற்ற வியாபாரிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டுமெனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி அதற்கான அறிவிப்பு நோட்டீசை வழங்கினர்.




Next Story