விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் இயங்கிய அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை


விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் இயங்கிய அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
x

விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றில் இயங்கிய அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அதோடு டிரோன் மூலமும் ஆய்வு செய்தனர்.

விழுப்புரம்

அரசு மணல் குவாரி

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலத்தில் ஓடும் தென்பெண்ணையாற்றில் கடந்த 12.12.2022 அன்று அரசு மணல் குவாரி தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் 19.12.2022 முதல் அங்குள்ள தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி செயல்பட தொடங்கியது.

இந்த மணல் குவாரியில் தமிழக அரசால் அனுமதி அளிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் பல மடங்கு அதிகமாக பள்ளம் தோண்டி மணல் அள்ளப்பட்டு வருவதாகவும், எனவே இந்த மணல் குவாரியை மூட வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தினர்.

மூடப்பட்டது

இதையடுத்து இந்த மணல் குவாரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட விதியை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதாகவும், மணல் விற்பனையில் முறைகேடு நடைபெறுவதாகவும் கூறி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை கடந்த 30.6.2023 அன்று நடந்தபோது வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஏனாதிமங்கலத்தில் மணல் குவாரி செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்படி மறுநாளே (அதாவது 1.7.2023) முதல் அரசு மணல் குவாரி மூடப்பட்டது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

இதனிடையே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வந்த அரசு மணல் குவாரியில் எழுந்த புகார்களை தொடர்ந்து அங்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

அந்த வகையில், நேற்று முன்தினம் கடலூர் மாவட்ட எல்லையான பெண்ணாடம் மற்றும் அரியலூர் மாவட்ட எல்லையான சேந்தமங்கலம் வெள்ளாற்றில் செயல்படும் மணல்குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலத்தில் இயங்கி வந்த மணல் குவாரியில் சோதனை நடத்துவதற்காக காலை 9 மணியளவில் 5 கார்களில் அமலாக்கத்துறை அதிகாரி அரிபாபு தலைமையில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்திறங்கினர். இவர்களுடன் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் 10-க்கும் மேற்பட்டோர் வந்தனர்.

டிரோன் மூலம் ஆய்வு

மணல் குவாரியில் அரசு நிர்ணயித்த அளவை விட எந்தளவிற்கு அதிகமாக பள்ளம் தோண்டி மணல் எடுத்துள்ளனர், எவ்வளவு மணல் எடுக்கப்பட்டுள்ளது? அதன் மூலம் கிடைத்த வருவாய் என்ன? அதற்கான ஆவணங்கள் எல்லாம் முறையாக இருக்கிறதா? அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள அளவிற்கு மட்டுமே மணல் அள்ளப்பட்டுள்ளதா? என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும் அவர்கள், டிரோன் கேமராக்களை வானில் பறக்கவிட்டு மணல் குவாரியில் எவ்வளவு அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டு மணல் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் மணல் அள்ளப்பட்ட இடத்தில் நவீன அளவீடு செய்யும் கருவி மூலம் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கடந்த 3 மாதங்களாக செயல்பாட்டில் இல்லாமல் மூடப்பட்டுள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

..........


Next Story