இருவேல்பட்டுஅரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் விதைச்சான்று, அங்ககச்சான்று அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தரமான விதைகளை உற்பத்தி செய்யுமாறு அறிவுறுத்தினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இருவேல்பட்டு அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இணை இயக்குனர் ஜெயசெல்வின் இன்பராஜ், விதை ஆய்வு இணை இயக்குனர் அவ்வை மீனாட்சி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்க விதைச்சான்று நடைமுறையின்படி உற்பத்தி செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். பின்னர் கம்பு பயிரில் தனசக்தி ரகத்தில் ஆதார நிலை-2 விதை சுத்திகரிப்பு பணி நடைபெற்று வருவதை அவர்கள் பார்வையிட்டனர்.
உயர்மட்ட சுத்திகரிப்பு எந்திரம்
மேலும் சுத்திகரிப்பு நிலையத்தில் உயர்மட்ட சுத்திகரிப்பு எந்திரத்தை பார்வையிட்டு அதன் திறனை கேட்டறிந்தனர். அப்போது சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களிடம், பணியை துல்லியமாக செய்யுமாறு அறிவுறுத்தினர். பின்னர் சான்றட்டை பொருத்தப்பட்டு விவசாயிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ள நெல் கோ 51 ரகத்தை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது விதை கம்பு பயிரிட்ட வயலாமூர் விவசாயி அருள்ஜோதி, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன், விதைச்சான்று அலுவலர் கருணாநிதி, விதை சுத்திகரிப்பு நிலைய அலுவலர் கவுசல்யா ஆகியோர் உடனிருந்தனர்.