ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டம்
கோவையில் பைக் டாக்சிகளை தடைசெய்யக் கோரி ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.
கோவை
கோவையில் பைக் டாக்சிகளை தடைசெய்யக் கோரி ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.
ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டம்
ஓலா, ஊபர் செயலிகள் (செல்போன்-ஆப்) வாயிலாக முன்பதிவு செய்யப்படும் வாடகை வாகனங்களை முறைப்படுத்தும் வகையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
ஆட்டோக்களுக்கு மீட்டர் வழங்க வேண்டும், பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதன்படி கோவையில் உள்ள 6 வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அருகே கோவை மாவட்ட அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டம்
அப்போது பைக் டாக்சி என்று அழைக்கப்படும் இருசக்கர வாகன சவாரியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் இதுதொடா்பாக கோவை மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, வணிக வாகனங்களை இயக்க பேட்ஜ் உரிமம் பெற வேண்டாம் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவித்ததை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடைபெற்றது. கோவையில் 6 வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பைக் டாக்சியை தடை செய்ய கோரியும், தடையை மீறி இயக்கப்படும் பைக் டாக்சியை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் மொத்தம் 800 டிரைவர்கள் பங்கேற்றோம் என்றனர்.
இந்த நிலையில் கோரிக்கை மனு அளித்ததன்பேரில் கோவையில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் சிறப்பு தணிக்கை அதிகாரிகள் அதிரடி வாகன தணிக்கை நடத்தினர். அதில் கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பைக் டாக்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.