வாய்க்காலில் தவறி விழுந்து மூதாட்டி பலி
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பங்களாப்புதூர் ரோடு, ஓம் சக்தி வீதியில் தாய் மற்றும் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தவர் இமானுவேல். நேற்று முன்தினம் தனது தாய் ஜெயலட்சுமியை (வயது 73) காணவில்லை என காங்கயம் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயலட்சுமியை தேடி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலட்சுமிக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாகவும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னரும் பார்வை சரியாக தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் ஜெயலட்சுமி மன உளைச்சலில் இருந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஓலப்பாளையம் அடுத்த சிகாரிபுரம், பொன்பரப்பியிலுள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் ஒரு பெண்ணின் உடல் மிதப்பதாக நேற்று காலை வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் காணாமல் போன ஜெயலட்சுமி தான் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று தெரியவில்லை. இதுபற்றி ஜெயலட்சுமி குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ஜெயலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.