முதியவர் அடித்துக் கொலை


முதியவர் அடித்துக் கொலை
x

செஞ்சி அருகே முதியவரை 2 மனைவிகளுடன் சேர்ந்து விவசாயி அடித்து கொலை செய்தார்.

விழுப்புரம்

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குறிஞ்சிப்பை கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜா (வயது 75). இவரது நிலமும், அதே ஊரை சேர்ந்த விவசாயி ரங்கநாதன் (62) என்பவரது நிலமும் அருகருகே உள்ளது. இதற்கிடையே அதே ஊரில் அமைந்துள்ள பட்டாபிராமர் கோவிலுக்கு சொந்தமான நிலமும் அங்கு உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பட்டாபிராமர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ரங்கநாதனின் தம்பி காசிவேல் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார்.

இதையடுத்து நேற்று காலை ரங்கநாதன் அந்த நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தர்மராஜா ரங்காதனிடம் ஏன் என் நிலத்து வரப்பை உழுகிறாய் என கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரங்கநாதன் தனது 2 மனைவிகளுடன் சேர்ந்து தர்மராஜாவை தாக்கியதாக தெரிகிறது.

போலீசார் விசாரணை

மேலும் அதனை தடுக்க முயன்ற தர்மராஜாவின் உறவினர் சக்கரவர்த்தியையும் அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது. இதனிடையே ரங்கநாதன் உள்ளிட்டவர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த தர்மராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி, இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று தர்மராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சக்கரவர்த்தி அளித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கநாதன் மற்றும் அவருடைய மனைவிகள் வசந்தா (50),பிருந்தா (48) ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story