நண்பனை கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை


நண்பனை கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 18 Aug 2023 1:45 AM IST (Updated: 18 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நண்பனை கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.

கோயம்புத்தூர்

கோவையில் நண்பனை கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.


ராம்நகர்


கோவை ராம்நகர் அன்சாரி வீதியில் சாலையோரம் வசிப்பவர் சுப்பிரமணி (வயது 68). இவருடன் சுந்தரராஜன் என்ற ராஜன் (47) வசித்து வந்தார்.

இந்த நிலையில் சுப்பிரமணி ஒரு செல்போனை பயன்படுத்தி வந்தார். அந்த செல்போனில் அவர் அடிக்கடி பாட்டு கேட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த அவரது நண்பரான சுந்தரராஜன் அந்த செல்போனை வாங்கியுள்ளார்.


பின்னர் சுந்தரராஜன் அந்த செல்போனை மற்றொரு நபருக்கு விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுப்பிரமணிக்கும், சுந்தரராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதன்பின்னர் நண்பர்கள் இருவரும் சமாதானம் அடைந்து ஒன்றாக அதே இடத்தில் வசித்தனர். இந்த நிலையில் கடந்த 15.10.21 அன்று மீண்டும் செல்போன் தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.


கொலை


இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி அங்கு கிடந்த கல்லை எடுத்து சுந்தரராஜன் தலைமீது கல்லை தூக்கி போட்டார். இந்த சம்பவத்தில் சுந்தரராஜன் பலத்த காயம் அடைந்தார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த பகுதியை சேர்ந்த சிலர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவை காந்திபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சுப்பிரமணியை கைது செய்தனர்.


இது தொடர்பான வழக்கு கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிரேகா, நண்பனின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த சுப்பிரமணிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.



Next Story